புதுச்சேரி அரசின் விருது பெற்றது ‘குரங்கு பெடல்’ திரைப்படம் 

புதுச்சேரி மாநில அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது ‘குரங்குப் பெடல்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான விருது வழங்கப்பட்டது.

Oct 5, 2024 - 13:03
புதுச்சேரி அரசின் விருது பெற்றது ‘குரங்கு பெடல்’ திரைப்படம் 
kurangu pedal movie

மதுபானக்கடை திரைப்படம் மூலம் தமிழ்த் திரை ஆர்வலர்களுக்குப் பரிச்சயமானவர் இயக்குநர் கமலக்கண்ணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘குரங்குப் பெடல்’ என்கிற திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நடிகர் காளி வெங்கட் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் சிறுவர்களின் உலகையும் அவர்களது கொண்டாட்டங்களையும் ஆழமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்கிற விருது சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் இந்தியத் திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்க மொழித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்று நடைபெற்ற துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லஷ்மிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து 2023ம் ஆண்டின் புதுச்சேரி அரசின் சிறந்தத் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட குரங்கு பெடல் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி கவுரவித்தார்.

இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி...

“திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக உள்ளது உள்ளது, 
ஒரு சில படங்களின் கருத்துகள் மனித வாழ்வுக்கு உகந்ததாக உள்ளதால் அவை சிறந்த படமாக அமைகிறது, 
திரைப்படங்கள் மூலம் பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர், மக்களின் அன்றாட வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பது மிகக் கடினம் அப்படி ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வருகின்றன, 

அப்படி நல்ல கதையைத் தேர்வு செய்து அதனை இயக்கி அனைவரது பாராட்டுகளையும் இயக்குனர் பெற்றுள்ளார். அவர் மேலும் மேலும் சிறந்த திரைப்படங்களை இயக்க வேண்டும். அதுமட்டுமின்றி பெயர் தெரியாத படங்கள் மட்டுமே விருதுகள் பெறுகின்றது, ஏனென்றால் அது மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய படமாக உள்ளது. மேலும் 50 முதல் 100 நாள்கள் வரை ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி நான்கு நாட்களிலேயே போட்ட பணத்தை வசூல் செய்யும் நிலை உருவாகி உள்ளது.

எனது ஆசிரியரின் சைக்கிளை துடைப்பதாக கூறி, அவருக்கே தெரியாமல் அவரது சைக்கிளில் குரங்கு பெடல் போட்ட அனுபவம் எனக்கும் உண்டு. இந்த குரங்கு பெடல் திரைப்படத்தைப் பார்க்கையில் எனக்கு என் சிறு வயது நினைவுகளெல்லாம் மேலெழுந்தன” என்றார். 

விருது வாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கமலக்கண்ணன்... 

 “குரங்கு பெடல் படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கான படங்களை இயக்க முன் வரும் இயக்குநர்களுக்கு இந்த விருது ஊக்கமாக இருக்கும். இந்தத் திரைப்படத்தை புதுச்சேரி அரசு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய அளவில் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கான திரைப்படங்கள் குறைந்து வந்தாலும், தமிழில் தற்போது குழந்தைகளுக்கான படங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பார்க்கப் பார்க்க இது போன்ற படங்கள் அதிகமாக வெளியாகும் என்ற அவர், 

தேசிய விருதில் குழந்தைகளுக்கான படங்களுக்கான பிரிவு என்று ஒன்று தனியே இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அரசு விருதுகளில் இது போன்ற படங்களை புறக்கணிப்பது இயக்குனர்களை வருத்தமடைய செய்கிறது. இது போன்ற குழந்தைகளுக்கான படங்களை இயக்குவதற்கு மாநில அரசுகள் மானியம் வழங்க முன்வர வேண்டும்.” என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow