ஆர்.எம். வீரப்பன் காலமானார்.. எம்ஜிஆரின் நிழல்.. யார் இந்த ஆர்.எம்.வீ

திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

Apr 9, 2024 - 15:11
Apr 9, 2024 - 16:54
ஆர்.எம். வீரப்பன் காலமானார்.. எம்ஜிஆரின் நிழல்.. யார் இந்த ஆர்.எம்.வீ

தமிழ்நாட்டின் மூத்த திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரின் கழகத் தலைவர் ஆவர். எம்.ஜி.ஆரின் நிழலாக வளம் வந்த இவர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்தார். எம்ஜிஆர் கழகம் மற்றும் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்த ஆர்எம் வீரப்பன் வயது முதிர்வு காரணமாக தி.நகரில் உள்ள திருமலை பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.

வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் கடைசியாக பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன், சிறுவயதிலேயே நாடகம் மற்றும் நடிப்பில் ஈர்க்கப்பட்டார். அவரது தந்தையின் மரணம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. குடும்ப பொருளாதார சூழ்நிலையால் 9 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு முடிந்தது.  நாச்சியார்புரத்தில் உள்ள அவரது மைத்துனர் கடைக்கு உதவிக்கு அனுப்பப்பட்டார்.

பெரியார். அண்ணாவிடம் பணியாற்றும் பேறு பெற்றவர் ஆர்.எம்.வீரப்பன். 1953 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து எம்ஜிஆர் நாடக மன்றம் என்ற நாடகக் குழுவைக் கொண்டிருந்த எம்ஜிஆரை, ஆர் எம் வீரப்பனின் செயல்கள் கவர்ந்தது. எம்ஜிஆர் மேனேஜரைத் தேடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து எம்ஜிஆர் நாடகக்குழு மேனேஜராக பணியாற்றினார். எம்ஜிஆர் பிக்சர்ஸ் பங்குதாரர் ஆக இருந்தவர். எம்ஜிஆரின் தாயார் பெயரிலையே சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன்.  எம்ஜிஆரின் வலதுகரமாக திகழ்ந்தவர். எம்ஜிஆரின் நிழலாக வலம் வந்தவர் ஆர்.எம்.வீரப்பன். 

அதிமுக உருவாவதற்கு முக்கிய காரணமாக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார். 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்ஜிஆர் உடல்நலமில்லாமல் இருந்த போது தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவரது நிழலாக செயல்பட்டு வெற்றி பெற வைத்தவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றியவர். 

கடந்த 1984 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் - சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமெரிக்க மருத்துவமனையில் சிசிக்கை பெற்று வந்தார். அவரது பேச்சு குறைபாடு காரணமாக, எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.  இதனை எதிர்த்து ஆர்.எம்.வீரப்பன் மிகச்சிறப்பான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைப் படுக்கையில் இருந்து வெற்றிச் சின்னத்தில் இரண்டு விரல்களை உயர்த்திச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை ஆர்.எம்.வீரப்பன் முதலில் வெளியிட்டார். மற்ற புகைப்படங்களில் தலைவர் சாப்பிடுவதும், எம்.ஜி.ஆர் செய்தித்தாள்களைப் பிடித்து வாசிப்பதும், சாப்பிட்டு சிரித்ததும் போன்ற மெல்லிய வீடியோவும் அடங்கும். 

1987 இல் எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜானகி அணியில் இருந்தவர். அதிமுக சட்டசபையில் பெரும்பான்மையாக இருந்தாலும் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிளவு பட்டது. 1988ஆம் ஆண்டு சட்டசபையில் அப்போது முதல்வராக இருந்த ஜானகி ராமச்சந்திரனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் ஆட்சி கவிழ்ந்தது. 

இதனையடுத்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஆதரவு அதிகமாக இருக்கவே, ஜானகி ராமச்சந்திரன் ஜெயலலிதா உடன் சமாதானம் செய்து கொண்டார். ஆர்.எம். வீரப்பனும் அப்போது ஜெயலலிதா உடன் சமரசமடையவே,  அதிமுகவின் இணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார். ஜெயலலிதா காலத்தில் அந்த பதவியை முதலாகவும் கடைசியாகவும் வகித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்று பட்ட பிறகு கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார். 

ஆர்.எம்.வீரப்பன் நிறைய திரைப்படங்களை தயாரித்துள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பாட்சா திரைப் படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்ட போதுதான் பட விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசியது பரபரப்பானது. இதனையடுத்து உடனடியாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பல ஆண்டு காலம் அரசியலில் இருந்து விலகி இருந்தாலும் அவரை அரசியலும் அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தனர். தனது 98 வது வயதில் இன்று வயது முதிர்வினால் காலமானார் ஆர்.எம்.வீரப்பன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow