அன்றே கணித்த ராகுல்காந்தி! இணையத்தை கலக்கும் X பதிவு!

தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது எனக் கூறி, அவற்றை அதிரடியாக ரத்து செய்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல்காந்தியின் பழைய எக்ஸ் வலைத்தள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Feb 15, 2024 - 15:15
Feb 15, 2024 - 15:58
அன்றே கணித்த ராகுல்காந்தி! இணையத்தை கலக்கும் X பதிவு!
Rahul Gandhi

2017ல் அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் முறை திட்டம், 2018ல் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின்கீழ் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே எந்த ஒரு இந்திய குடிமகன் அல்லது நிறுவனமும் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், எந்தவொரு கட்சிக்கும் நன்கொடை வழங்கலாம். அதோடு, ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட  29 கிளைகளில் இருந்து மட்டுமே தேர்தல் பத்திரத்தை பெற முடியும்.

இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இன்று (பிப்.,15) நடைபெற்ற நிலையில்,  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  

தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?

“தேர்தல் பத்திரம் முறை என்பது சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த தேர்தல் பத்திரம் முறையானது இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடையாக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை என்பது சட்டவிரோதமானது. தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் முறை உள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்பட்டைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

வைரலாகும் ராகுல் பதிவு

இந்நிலையில், தேர்தல் பத்திரம் குறித்த ராகுல்காந்தியின் பழைய பதிவு ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. அதில்” புதிய இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன் தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகின்றது” என கூறி முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் புகைப்படத்துடன் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow