தேர்தல் பத்திரம் ரத்து..! இது தான் நல்லது.. உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சிகள்..!

Feb 15, 2024 - 15:38
Feb 15, 2024 - 15:45
தேர்தல் பத்திரம் ரத்து..! இது தான் நல்லது.. உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சிகள்..!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்துசெய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன. 

SBI வங்கியிடம் இருந்து தேர்தல் பத்திரங்களைப் பெற்று, விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தனிநபரோ கார்ப்பரேட் நிறுவனமோ நன்கொடை அளிக்கும் வழிமுறையை மத்திய அரசு முன்னதாக அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோதம் எனக்கூறி தேர்தல் பத்திர திட்டத்தை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் லஞ்சத்தைப் பெற்றுவந்த பாஜகவுக்காக உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றே தேர்தல் பத்திர முறைகேடு எனவும் அவர் கூறினார். 

தேர்தல் பத்திரத்தின் மூலம் 95 சதவீத நன்கொடையைப் பெற்ற பாஜக, எதிர்காலத்தில் இதுபோன்ற யோசனைகளை நாடுவதை நிறுத்திவிட்டு உச்சநீதிமன்ற வலியுறுத்தலை பின்பற்ற வேண்டும் என மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி, தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி CPM எனக்கூறி தீர்ப்பை வரவேற்றார். ஊழலுக்கு ஆதரவான அரசின் நடவடிக்கைகளை தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது எனவும் பதிலுக்கு பதில் லாபத்தை நாடுதல் என்ற கார்ப்பரேட் - அரசியல் கட்சிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியும் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow