சென்னைக்கு ரெட் அலர்ட் - வானிலை மையம் : சாலைகளில் மழைநீர் தேக்கம்: வீடுகளில் முடங்கிய மக்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், ரெட் அலர்ட்டாக வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது.
டிட்வா வேகம் குறைந்தது; சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட்
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. முன்னாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.
சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது. திருவள்ளூர், சென்னைக்கு இன்று (டிச.,01) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,
இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், ரெட் அலர்ட்டாக வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது.
7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் சென்னை, கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அதேசமயம் பாம்பன், தூத்துக்குடி ஆகிய 2 துறைமுகங்களில் 1ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வலுவிழந்த புயல் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருப்பதால், மழை தொடர்ந்து பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
பூண்டி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வினாடிக்கு 2,100 கன அடி விதம் நீர் வரத்தானது உள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி நீர் தேக்கத்தில் நீர்மட்டம் 33.27 அடியாக உள்ளது. இதே போன்று சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரபாக்கம், புழல் உள்ளிட்ட நீர் தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மழைநீர் தேக்கம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கோயம்பேடு, கொளத்தூர், அண்ணநகர் என பகுதிகளில் தொடர் மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தொடர் மழை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரில் கடந்த 6 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரவு வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெரீனா கடற்கரை மூடல்
டிட்வா புயல் காரணமாக சென்னை தொடர் மழை வருகிறது. பொதுமக்கள் இது போன்ற நேரங்களில் மெரீனா கடற்கரை சென்று செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். இதால் சென்னை மெரீனா கடற்கரை செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரைக்கு செல்லும் சாலைகள் அனைத்து தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
What's Your Reaction?

