சென்னை அருகே ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே! 

சென்னை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

Oct 12, 2024 - 07:57
Oct 12, 2024 - 08:14
சென்னை அருகே ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே! 

மைசூரில் இருந்து சென்னை வழியே பீஹார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஏழு முப்பது மணி அளவில் புறப்பட்டு பிஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்துள்ளனர். பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில் நிலையம் நெருங்கும் போது எக்ஸ்பிரஸ் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் பிரதான தண்டவாளத்தில் வருவதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டிருந்த சூழலில் பிரதான தண்டவாளத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய லூப்லைன் எனும் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இன்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 

இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்குகளை ஏற்றி செல்லும் முதல் பெட்டி தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. மூன்று பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து வெளியே வந்து கவிழ்ந்தன. விபத்தால் அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலறி அடித்தபடி இறங்கி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும், காவல்துறையினரும் விரைந்தனர். பயணிகள் தங்களது உடமைகளை தலையில் சுமந்தபடி கூட்டம் கூட்டமாக வெளியேறினர். 

தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு அவர்களுக்கு குடிநீர் வழங்கி அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட ரயில் பயணிகள் அனைவரும் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். மேலும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு முடுக்கி விட்டார். அரக்கோணம் பேரிடர் மீட்பு படையில் மூன்று குழுக்களை சேர்ந்த 105 வீரர்களும், தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவை சேர்ந்த 20 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

முதற்கட்டமாக விபத்திற்கு உள்ளான பெட்டிகளில் பயணிகள் யாரேனும் உள்ளனரா என பேரிடர் மீட்பு படையினர் சோதனை நடத்தி தொடர்ந்து மோப்ப நாயை வைத்தும் பயணிகள் சிக்கி உள்ளனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். காயமடைந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் மூலம் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். 

விபத்து தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். தற்போது வரை எந்தவித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டு கவிழ்ந்து இருக்கக்கூடிய மூன்று பெட்டிகள் மீட்கப்பட்ட பிறகு அதன் உள்ளே யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து முழுமையாக தெரிவிக்க முடியும் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு எட்டு முப்பது மணி அளவில் விபத்து நடைபெற்ற சூழலில் சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை என்பது முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட கவாச் தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்தாதே இந்த விபத்திற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தற்பொழுது மீட்பு பணியிலும் மறுசீரமைப்பு பணிகளுக்காகவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow