அதிமுக அப்சரா ஞாபகமிருக்கா?.. 50 லட்சம் நஷ்ட ஈடு.. பிரபல தமிழ் யூடியூபரை விடாத ஹைகோர்ட்
அதிமுக செய்தித் தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், பிரபலமான மாடலாகவும் உள்ளார். லண்டனில் படித்திருந்த அப்சரா, கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். பிறகு அதே ஆண்டு அதிமுக சென்றார். ஜெயலலிதா முன்னணியில் கட்சியிலும் தன்னை இணைத்து கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அவர், தினகரன் அணியில் இருந்தார். தினகரனுடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையல், காங்கிரசுக்கு சென்றார்.. மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பை அப்சராவுக்கு ராகுல் காந்தி வழங்கினார்.
சென்னையை சேர்ந்த பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், அப்சராவை அவதூறாக பேசி 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்சரா ரெட்டி, பிரவீன் மீது மான நஷ்ட வழக்கினை தொடர்ந்தார்.
தன்னை பற்றி வதந்திகளை பரப்பி கொண்டிருக்கும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், தன்னை பற்றி வெளியிடப்பட்ட 10 வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். காரணம், யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால், அப்ராவின் நிறைய நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தன்னுடைய புகாரில் அப்சா தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவினை பிறப்பித்தது. அதன்படி, அப்சராவுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் கோர்ட் தெரிவித்திருந்தது.
தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்சரா ரெட்டி தரப்பில், வழக்கு தொடர்ந்ததும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும் எனக் கூறி, அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து ஜோ மைக்கேல் பிரவீனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?