பணிப்பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: திமுக எம்.எல்.ஏ- மகன், மருமகளின் ஜாமின் மனு தள்ளுபடி.!
பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்தியதாக கைதுசெய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள் அளித்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீட்டில் வேலைப்பார்த்து வந்த 18 வயது இளம்பெண்ணை சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக தனது பெற்றோரை சந்திக்க விடாமலும், சிகரெட்டால் சூடு வைத்தும், அடித்து துன்புறுத்தி வந்ததாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாகினர். பின்னர், எம். எல்.ஏ-வின் மருமகள் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து காவல்துறையினர் பிப்.9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, இருவரும் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், இருவருக்கும் ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இருவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க | “ஒன்றிய அரசை எதிர்க்கும் விஷயத்தில் கேரள அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார்” - முதலமைச்சர் கடிதம்
What's Your Reaction?