வரும் தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறோமா?-ஜெயக்குமார் பேட்டி
பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்று கதவுகளை சாத்திவிட்டோம்
அதிமுகவின் கதவு சாத்தப்பட்டுவிட்டது.முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம் என தஞ்சையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவின் நிலைப்பாட்டை கூறியுள்ளார்.கூட்டணியின் கதவுகள் திறந்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சி நிலைபாட்டை பொறுத்தவரை பாஜக ஒரு காலத்தில் தோழமையாக இருந்தது. இப்போது அரசியல் ரீதியாக எதிர்க்கின்ற கட்சியாக உள்ளது.
எங்களோட முன்னோடிகள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக கட்சி, ஒரு மாநில தலைவர் கடுமையான அளவிற்கு விமர்சனம் கொடுத்து கண்டனங்கள் தெரிவிக்கும்போது தொடர்ச்சியாக எங்களை சிறுமைப்படுத்த கூடிய தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
தொண்டர்களும், பொதுமக்களும் பாஜகவுடனான கூட்டணியை விரும்பவில்லை. எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிடக்கூடாது என்ற வகையில், ஒட்டுமொத்த பட்டாசு வெடித்த வரலாறு உண்டா?.பாஜகவை கழட்டிவிட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தார்கள்.
பாஜகவுடன் இப்போதில்லை எப்போதும், எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் கொண்டாடினார்கள். எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை பாஜகவுக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம்.அவர்கள் வரக்கூடாது என்று சாத்தி விட்டோம்.இதுதான் எங்கள் நிலைப்பாடு எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்” என்றார்
What's Your Reaction?