கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் பணியாளர்கள் மீட்பு... நடுக்கடலில் திக் திக் நிமிடங்கள்...!

கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட கப்பல் பணியாளர்கள் 17 பேர் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

Mar 17, 2024 - 08:27
கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் பணியாளர்கள் மீட்பு... நடுக்கடலில் திக் திக் நிமிடங்கள்...!

இந்திய கடல் எல்லைக்குள் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் பணியாளர்கள் 17 பேரை, சண்டையிட்டு வீரதீரத்துடன் இந்திய கடற்படை பத்திரமாக மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றிருக்கிறது.

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஏழ்மையான நாடான சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அதிகம். இவர்கள் ஏடன் வளைகுடா, ஆப்பிரிக்க மற்றும் அரேபிய கடற்பகுதிகளை குறிவைத்து வணிக கப்பல்கள், மீன்பிடி கப்பல்களை சிறைபிடித்து அதிலிருக்கும் பொருட்களை கொள்ளையடிப்பதுடன், கப்பல் பணியாளர்களையும் கடத்தி பல நாடுகளை மிரட்டி பணம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் உலக நாடுகளின் போர்க்கப்பல்கள் இவர்களுக்கு தகுந்த எதிர்வினையாற்றுவதும் உண்டு. 

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வங்கதேசத்திற்கு சொந்தமான எம்.வி.யெருன் என்ற சரக்கு கப்பல் சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போதும் அதிரடியாக கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் இருந்த பணியாளர்களும் அப்படியே சிக்கிக்கொண்டனர். இந்த தகவலறிந்து மீட்க முயன்ற வங்கதேசத்தின் முயற்சி பலனளிக்கவில்லை. 

இந்நிலையில், சரியாக இந்திய கடற்பகுதியில் இருந்து 2,600 கிலோமீட்டர் தொலைவில் மார்ச் 15ஆம் தேதி அக்கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் போது, இந்திய கடற்படையினருக்கு SOS எனப்படும் அவசர அழைப்பு அக்கப்பலில் இருந்த பணியாளர்கள் மூலம் விடுக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிஹாப்டரில் சென்று கப்பல் இருக்கும் இடத்தை இந்திய கடற்படை உறுதி செய்தபோது, கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். சர்வதேச சட்டத்தின்படி மற்றொரு நாட்டு எல்லையில் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற சட்டம் உள்ளது. அதேவேளையில், தற்காப்பிற்காகவும், கடற்கொள்ளையர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என்ற சட்டமும் உள்ளது. 

இதனால் உடனடியான உத்தரவு பெற்று பதில் தாக்குதலை இந்திய கடற்படை துவங்கியது. அதையடுத்து அதிரடியாக ஐ.என்.எஸ் கொல்கத்தா, ஐ.என்.எஸ் சுபத்ரா அங்கு கொண்டு செல்லப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் அடிபணிந்தனர். இதைதொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட கப்பல் பணியாளர்கள் 17 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் ஐ.என்.எஸ் கொல்கத்தாவிலும், அதன்பின் கைது செய்யப்பட்ட கடற்கொள்ளையர்கள் ஐ.என்.எஸ் சுபத்ராவிலும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இந்திய கடற்படையின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow