குழந்தை கடத்தல்; ஸ்கெட்ச் போட்ட காவல்துறை.. சினிமா பாணியில் அதிரடி மீட்பு..
புதுச்சேரி கடற்கரையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பழங்குடியின பெண் குழந்தையை காரைக்கால் போலீசார் மீட்டனர். துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடற்கரை சாலையில் (14.02.2024)இரவு பொம்மை விற்று கொண்டிருந்தபோது, அருகில் விளையாடி கொண்டிருந்த பெண் குழந்தை மாயமானது.
குழந்தையின் பெற்றோர் கடற்கரையில் பல இடங்களில் அலைந்து தேடியும், குழந்தை கிடைக்கவில்லை.இதனால் பதற்றம் அடைந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் பெரியக்கடை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
போலீசார் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழந்தையைத்தேடி சென்று விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட குழந்தை காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து போலீசார் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். காரைக்கால் புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி செல்வது தெரியவந்தது.இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் விசாரணை மேற்கொண்ட காரைக்கால் போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை 7 மணி அளவில் மீட்டனர்.
இதனை அடுத்து குழந்தையை வைத்திருந்த பெண் ஒருவரை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.இதற்கிடையில் புதுச்சேரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்த இரண்டு மணி நேரத்திற்குள் காணாமல் போன குழந்தையை மீட்ட காரைக்கால் காவல்துறைக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?