#Resign_Stalin ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்.. மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் ராஜினாமா செய்க.. இபிஎஸ்
கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் வலைத்தள பக்கத்தில் #Resign_Stalin என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் இன்று காலை வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, மேலும், 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
கருணா புரத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரவீன் என்பவர்கள் சாராயம் குடித்ததால் இறந்து போன நிலையில், அவரது துக்க நிகழ்வுக்கு சென்றவர்கள் மீண்டும் அதே சாராயத்தை அப்பகுதியில் அருந்தியதால் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஒரே வீட்டில் இருவர் இறந்த துக்கம் தாளாமல் அப்பகுதியினர் அதே பகுதியில் கள்ளத்தனமாக விற்ற சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இந்த இறப்பு சம்பவம் தொடர்பாக அந்த வீட்டைச் சேர்ந்த நபர்கள் செய்தியாளர்களிடம் விஷ சாராயம் குடித்ததால் தான் இவர்கள் இறந்தனர் என்பதை தெரிவித்தபோது அப்போதைய கள்ளக்குறிச்சி ஆட்சியர் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதன் அடிப்படையில், மற்றவர்களும் அதேசாராயத்தை அருந்தியதால் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 35க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், வீட்டில் இருப்ப வைத்திருந்த சாராயத்தை குடித்ததாகக் கூறி மேலும் 5 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைக்கு வருவதற்கு பயந்துகொண்டு வீட்டிலேயே இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவத்துறையும், காவல் துறையும் இணைந்து சிறப்பு குழுக்களை ஏற்பாடு செய்து கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆட்சியர் கவனக்குறைவுடன் செயல்பட்டதுடன், கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தை மறைத்து வயிற்றுப்போக்கு என அறிக்கை விட்டதால் மற்றவர்களும் மீண்டும் அதே சாராயத்தை குடித்துள்ளனர். இந்த இறப்பு சம்பவத்திற்கு அப்போதைய ஆட்சியர் ஷ்ரவன்குமார் தான் காரணம் என அப்பகுதி கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசு, ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் என்பவரை நியமித்துள்ளது. அதேபோன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.
மேலும் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா,திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன்,காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு முன்னதாகவே சிலர் பாக்கெட் சாராயத்தை வாங்கி தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனது. அதுபோன்று கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வீட்டில் பாக்கெட் சாராயத்தை இருப்பு வைத்துள்ளனர். நேற்றைய தினம் கள்ளச்சாராய மரணம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாவதை பார்த்த நிலையிலும் வாங்கி வைத்திருந்த சாராயத்தை வீணடிக்க மனமில்லாத சிலர் தங்கள் வீட்டில் இருப்பு வைத்திருந்த சாராயத்தை நேற்று இரவு குடித்துள்ளனர். அப்படி பருகியதாகக் கூறி பெண் உள்பட 5 பேர் இன்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அதிமுக பொதுச்செயலாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது பேசிய அவர் மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கம் ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு மறுத்து விட்டது. சென்னையில் இருந்து ஸ்பெஷலிஸ்டுகளை அழைத்து வந்து உயர்தர சிகிச்சை கொடுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். ஓட்டு போட்ட மக்கள் மீதும் ஏழை மக்கள் மீதும் அக்கறை இல்லாத முதலமைச்சர் ஆட்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்தோரின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும் என்று தெரிவித்தார். தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் அனைத்து செலவுகளையும் அதிமுக ஏற்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்கவில்லை என்று பச்சை பொய் கூறினார் கலெக்டர்.கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொய் கூறினர். அதன் பிறகுதான் அதிக அளவில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அவருக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஏற்கனவே புகாரளித்தும் கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்கவில்லை. விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறியுள்ளது. அதனை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு, காவல்துறையினரின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயத்துக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் போதிய மருந்துகளும் இல்லை. அங்கு தேவையான மருத்துவர்கள் நியமிக்கவில்லை. கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருணாபுரம் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு இறந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?