மகளுக்கு பிறந்தநாள் பரிசு... புது டெக்னிக் பயன்படுத்தி ஷோரூமில் பைக் திருடிய பலே ஆசாமி... கைது செய்த போலீஸ்

Apr 8, 2024 - 12:25
மகளுக்கு பிறந்தநாள் பரிசு... புது டெக்னிக் பயன்படுத்தி ஷோரூமில் பைக் திருடிய பலே ஆசாமி... கைது செய்த போலீஸ்

மகளுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறி மேனேஜரை லாவகமாக ஏமாற்றி புதிய பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை போரூர், ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் 41, இவர் அதே பகுதியில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு வந்த ஒருவர், தனது மகளின் பிறந்தநாளுக்கு பரிசாக புதிய இருசக்கர வாகனம் கொடுக்க வேண்டும் என்று கூறி வாகனத்தை முன் பதிவு செய்தார். 

பிறகு வாகனத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. பணம் கட்டும் நேரத்தில், கடை ஊழியரை என்னுடன் அனுப்பி வையுங்கள், வீட்டில் இருந்து பணம் மற்றும் ஆவணங்களை கொடுத்து அனுப்புவதாகக் கூறினார். அவர் பேசியதைக் கேட்டு, புதிய இருசக்கர வாகனத்தை அந்த நபரிடம் மேனேஜர் கொடுத்து அனுப்பினார். கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரையும் அவருடன் அனுப்பிவைத்தனர்.

வளசரவாக்கம் பகுதியைச் சென்ற நிலையில், வீடு வந்துவிட்டதாக கீழே இறங்குமாறு கூறிய நிலையில் பின்னால் அமர்ந்திருந்த கடை ஊழியர் இறங்கினார். இறங்கிய அடுத்த வினாடியே புதிய இருசக்கர வாகனத்தை வேகமாக எடுத்துகொண்டு அந்த நபர் பறந்துவிட்டார். மர்ம நபர் பைக்கைத் திருடிச் சென்றதால் அதிர்ச்சியடைந்த ஊழியர், நடந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் ஷோரூமில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து புதிய இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மோட்டார் பைக்கை திருடி சென்ற நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார்,43 என்பது தெரியவந்தது.

இதே நபர்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகை கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 5 பவுன் நகையை திருடி சென்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புதிய மோட்டார் சைக்கிள், இரண்டு பவுன் நகை உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். அந்த நபர் வேறு எங்காவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலூசார் விசாரித்து வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow