தொடரும் வெப்ப அலை... ஹஜ் பயணிகளின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு... இந்தியர்களின் நிலை என்ன..?
சவுதி அரேபியாவில் தொடரும் வெப்ப அலை காரணமாக ஹஜ் பயணிகளின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியா: ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் எனும் தியாகத் திருநாளை கொண்டாடும் விதமாக ஜூன் 14ம் தேதி முதல் மெக்காவில் புனித யாத்திரை தொடங்கியது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் 1.75 பேர் சவுதி அரேபியா சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த 16ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலும் சில நாட்கள் வரை ஹஜ் பயணிகள் மெக்காவில் தங்கியிருந்து தங்களது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்ப சலனம் காரணமாக, நூற்றுக் கணக்கான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை மொத்தம் 900க்கும் அதிகமான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் 1400க்கும் மேற்பட்ட எகிப்து நாட்டினரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதேபோல், இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற ஹஜ் பயணிகளில், 80 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஜம்மு – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் வெப்ப சலனம் காரணமாகவும், இருவர் சாலை விபத்தில் பலியானதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு வயது மூப்பு காரணமாகவும் இந்தியர்கள் சிலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஜோர்டான், இந்தோனேஷியா, ஈரான், செனகல், துனியா, மலேஷியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் மெக்காவில் உயிரிழந்துள்ளனர். மெக்கா உட்பட சவுதி அரேபியாவில் தினந்தோறும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கூட்ட நெரிசல், தீ விபத்து போன்றவைகளால் ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்தாண்டு 200 பேரும், 2006ல் 300க்கும் மேற்பட்டோரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2015ம் ஆண்டு 2,200 ஹஜ் பயணிகள் மெக்காவில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது காணப்படும் வெப்ப சலனம் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் விவரங்களையும் எண்ணிக்கையையும் சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்து செய்தி அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தொடர்ந்து வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?