ஆட்சியில் பங்கு: கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் காங்., எம்.பி. மாணிக்கம் தாகூர்?
அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஆட்சியில் பங்கு என்பதை மறைமுகமாக சுட்டிகாட்டி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கூட்டணியில் சலசலப்பை மட்டுமில்லாது விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது.
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக - காங்கிரசு ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், திரைமறைவில் தவெகவுடனும் காங்கிரசு தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த செய்தி வதந்தி என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மறுத்து இருந்தார்.
இதே கருத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும் கூறி வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: யாருக்கு வாக்கு?” – தனியார் கருத்து கணிப்பு நிறுவனம் தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மாணிக்கம் தாகூரின் இந்த பதிவு ஆட்சியில் பங்கு என்பதை அதிகாரப் பகிர்வு என மறைமுகமாக கூறியுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் இந்த பதவி தமிழக அரசியலில் மீண்டும் விவாத பொருளாக மாறி புயலை கிளப்பி உள்ளது.
What's Your Reaction?

