"ரூ.1,700 கோடி கணக்கு எங்கே?" நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் காங்-க்கு பறந்த IT நோட்டீஸ்...
வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிரான காங்கிரசின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில், 4 ஆண்டுகள் வரி ரூ.1,700 கோடியை முறையாக செலுத்தாததாகக் கூறி அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 2014-2015 முதல் 2016-2017 வரையிலான 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் வருமானத்தையும் மறுமதிப்பீடு செய்யும் நடவடிக்கையை வருமானவரித்துறை தொடங்கியது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதே நேரத்தில் 2017-2018 முதல் 2020-2021 வரை 4 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வருமானத்தையும் மறுமதிப்பீடு செய்யும் நடவடிக்கை நடத்தப்பட்டது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்த போது, மறு மதிப்பீட்டு நடவடிக்கைகளில் தலையிடுவது இல்லை என்ற முந்தைய முடிவின் அடிப்படையில் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தொடர்ந்து காங்கிரசின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களுக்குப்பிறகு, 4 ஆண்டுகளில் ரூ.1,700 கோடி வரி செலுத்தவில்லை எனக்கூறி காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருந்த நிலையில், முன்னதாக காங்கிரசின் ரூ.285 கோடி நிதியை வருமான வரித்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?