மேயருக்கு ரூ.3 கோடி... கவுன்சிலருக்கு மட்டும் ரூ.45 லட்சமா..?

மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; திகைத்துப்போன மேயர் பிரியா..!

Feb 23, 2024 - 08:21
மேயருக்கு ரூ.3 கோடி... கவுன்சிலருக்கு மட்டும் ரூ.45 லட்சமா..?

கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, நேற்று மாமன்றக் கூட்டத்தில் வரவு-செலவு திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்று.பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 2024-25 சென்னை மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாகவும், தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து நிலைக்குழு, மண்டலக்குழு தலைவர்கள் உள்ளிட்ட கவுன்சிலர்கள் உரையாற்றினர்.

மாமன்றக் கூட்டத்தில் பேசிய (நகர திட்டமிடல் ) நிலைக்குழுத் தலைவர் இளைய அருணா, "சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதி 50% அதிகரிக்கப்பட்டு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.ஆனால், எங்களுக்கு ரூ.40 இலட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக மட்டுமே உயர்த்தியிருக்கிறார்கள். எங்களுக்கும் 50% நிதி உயர்வு வேண்டும்" எனக் கேட்டார். 

அதனைத் தொடர்ந்து பேசிய மண்டலக்குழுத் தலைவர் நொளம்பூர் ராஜன், "மேயருக்கு ரூ.3 கோடி பத்தாது, 20-க்கும் மேல் சட்டமன்றத் தொகுதிகளும் 200 வார்டுகளும் உள்ள ஒட்டுமொத்த சென்னைக்கு ஒரு மேயருக்கான நிதி இது போதுமா? அவருக்கு ரூ.3 கோடியல்ல ரூ.30 கோடி கொடுக்க வேண்டும்!" என சாடினார். 

தொடர்ச்சியாக மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என மேயருக்கான ரூ.3 கோடி மேம்பாட்டு நிதி குறித்து விமர்சித்தனர். 

உடனே கொதித்தெழுந்த மேயர் பிரியா, "கடந்த ஆண்டு கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி, ரூ.40 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு உயர்த்தி வழங்கப்படவில்லை. நிதிப்பற்றாக்குறை என்று சொல்லிவிட்டார்கள். தொடர்ந்து கவுன்சிலர்களுக்கு இந்த முறை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதலே எனக்கு ரூ.2 கோடியாகவே இருந்த மேம்பாட்டு நிதி, இப்போதுதான் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனக்கு ரூ.3 கோடியாக இருந்தாலும் அதை உங்கள் வார்டுகளுக்குத்தானே செலவு செய்யப்போகிறேன்" என்று பொறிந்து தள்ளினார்.

இறுதியாகப் பேசிய ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், "ரூ.45 லட்சமாக உயர்த்தப்பட்ட தங்களின் மேம்பாட்டு நிதியை இன்னும் அதிகரிக்க வேண்டும். ரூ.60 லட்சமாக உயர்த்தித்தர வேண்டும். குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாகவாவது இந்த பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிப்பீர்களா?" என மேயரையும், மாநகராட்சி ஆணையரையும் பார்த்துக் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சில நிமிடங்கள் கலந்தாலோசித்து, கவுன்சிலர்கள் மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் அனைத்து கவுன்சிலர்களும் குஷியாகி மேசைகளைத் தட்டி, அறிவிப்பை வரவேற்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow