"நீங்களா உண்மை சரிபார்ப்புக் குழு..?" அண்ணாமலை ஆவேச கேள்வி..!
ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழ்நாடு அரசு சொல்வது முற்றிலும் பொய்யானது
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவது பொய் என குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு கூறுவதை உண்மை என முன்வைப்பதற்காக மட்டுமே உண்மை சரிபார்ப்புக்குழு உள்ளதாகவும் சாடியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்குப் பெயர்களை மாற்றி திமுக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் குற்றம்சாட்டினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகிய இரண்டுக்கும் ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் உண்மை சரிபார்க்கும் குழு செய்தி ஒன்றை வெளியிட்டது. பின்னர் X தளத்தில் இருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், அண்ணாமலை தமது X தள பதிவில், திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பாளர், தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை என கூறியிருக்கிறார். மேலும், பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ரூ.2.7 லட்சம் வரை வழங்குவதகாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், இத்திட்டத்தின் கீழ் ஆகும் மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் செலவானதாக தமிழ்நாடு அரசு ரூ.269.81 கோடி கூடுதலாகக் கணக்கு காட்டியுள்ளது என தெரிவித்துள்ள அண்ணாமலை, ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழ்நாடு அரசு சொல்வது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மை சரிபார்ப்புக்குழு என அழைத்துக் கொள்ளும் அரசு நியமித்துள்ள குழு, தங்களை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும் என்றும் சாடியுள்ளார்.
What's Your Reaction?