தாமரை என்றாலே சிலருக்கு பயம்.. திமுகவுக்கு வாக்களித்து நாட்டை கெடுத்துவிட வேண்டாம்.. பாரிவேந்தர் பரபரப்பு பேச்சு..

Apr 12, 2024 - 21:30
தாமரை என்றாலே சிலருக்கு பயம்.. திமுகவுக்கு வாக்களித்து நாட்டை கெடுத்துவிட வேண்டாம்.. பாரிவேந்தர் பரபரப்பு பேச்சு..

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர், அத்தொகுதிக்கு உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் "இன்றைக்கு சில பேருக்கு தாமரை என்றாலே பயமாக உள்ளது. பெரம்பலூரில் தாமரைக்கு ஓட்டு கேட்ட பாஜக ஒன்றியத் தலைவரை திமுக மற்றும் விசிகவினர் சேர்ந்து வெட்டியுள்ளனர். இந்த செயல் அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அரசியல் கட்சிகள் இப்படி இருந்தால் நாடு எப்படி ஒழுக்கமாக இருக்கும். அதனால் தான் திமுக ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை நிகழ்கிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு அமைச்சர்கள் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஊழல் அமைச்சர்கள் தான். இந்த கட்சிக்கு மீண்டும் வாக்களித்தால் நிலைமை என்னவாகும்? இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது வெறும் கனவு தான்.

நீட் ரத்து ரகசியம் தெரியும் என திமுக சொன்னது என்னவானது? நீட் ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனத் தெரிந்தும் அதை வாக்குறுதியாக அளிப்பது விதாண்டாவாதம். எனவே மக்கள் நல்லவர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களித்து மக்கள் நாட்டை கெடுத்துவிட வேண்டாம்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow