விடாமல் துரத்தும் மாணவர் அமைப்பு... கருப்பு கொடி போராட்டத்தால் மீண்டும் கடுப்பான கேரள ஆளுநர்...

கேரள மாநிலம் கண்ணூருக்கு வந்த ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில எதிர்கட்சிகள், மாணவர் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் பகுதிக்கு வந்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ-யை சேர்ந்த ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் ஆரிப் முகமது கான், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் காவல்துறையினரிடம் அவர்களை கலைந்து போக செல்லுமாறு கூறினார். இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?






