மீண்டும் 'நோ' சொல்லிய அரவிந்த் கெஜ்ரிவால் - அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்.19) அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜராக இருந்த நிலையில், 6வது முறையாக புறக்கணித்துள்ளார்.
டெல்லி கலால் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் நிராகரித்து வந்தார். இதையடுத்து அவருக்கு 6-வது முறையாக இன்று (பிப்.19) நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகமால் 6வது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார்.
அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் சட்டவிரோதமானவை என்பதால் அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திரும்பத் திரும்பச் சம்மன் அனுப்புவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் 16-ம் தேதி அடுத்த விசாரணை தேதியில் அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்படி அமலாக்கத்துறைக்கு பதிலளித்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருப்பதால் அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
What's Your Reaction?