ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு… சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் நிறைவு நாளான வரும் 25-ம் தேதி சிறுமருதூர் கண்மாய் பொட்டல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுமதி கோரி இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்ற போது, இணையதளம் முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்ட நிலையில் இதுவரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் வரும் 25-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட கோரி கண்டரமாணிக்கம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் பெரியதம்பி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்டரமாணிக்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசின் அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையில் கண்டரமாணிக்கம் ஊர் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், வரும் 24-ம் தேதிக்குள் கண்டரமாணிக்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
What's Your Reaction?