சுட்டெரிக்கும் வெப்பம்.. தாரோடு கருகிய வாழைமரங்கள்.. தடுமாறும் தஞ்சை விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே சுட்டெரிக்கும் வெயிலால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் கருகி சாய்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்ப அலை வீசி வருகிறது. அனல் காற்று வீசி வருவதால் வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர். குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
தஞ்சைவூரில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழ்நிலையில் தஞ்சையை சுற்றியுள்ள கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழையை பயிரிட்டுள்ளனர்.
தற்போது வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால் வாழை மரங்கள் வெப்பம் தாங்காமல் தாரோடு முறிந்து சாய்ந்து விழுந்து வருவதாக கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களில் உள்ள இலைகள் கருகி சருகாக தொங்குவதாவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்சம் செலவு செய்து பயிரிட்ட வாழை மரங்களை ,வைகாசி, ஆனி மாதங்கள் முகூர்த்த நேரங்களில் சாகுபடி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் இந்த கடும் வெயிலால் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரங்களை அனுப்ப இயலாமல் பல லட்சம் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தினசரி தேவைக்காக விவசாயிகள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 20 லட்சம் வரை இலைகள் ஏற்றுமதி செய்த நிலையில் ,இலைகள் கருகி சருகாகியதால் ஏற்றுமதி 8 லட்சமாக குறைந்து விட்டதாக குமுறுகின்றனர்.
இந்த சாகுபடி குறித்து விவசாயிகள் கூறுகையில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிப்படைந்தோம். ஆனால் தற்போது வெப்பத்தால் மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
What's Your Reaction?