கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம் : சாங்கியும் செய்ய அழைத்து சென்று மருமகளை கொலை செய்த மாமியார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சாங்கியம் செய்ய மருமகளை அழைத்து சென்று கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது திருமணம் - குடும்பத் தகராறு
சங்கராபுரம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், தனது முதல் கணவர் இறந்த பிறகு, சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மரியாரோசாரியோ என்பவருடன் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறொரு கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருமண விஷயம் ரொசாரியோவின் தாயார் கிறிஸ்தவ மேரிக்குத் தெரிய வந்ததையடுத்து, இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சாங்கியம் செய்ய அழைத்துச் சென்று கொலை
இந்தச் சூழலில், ரொசாரியோவின் தாய் கிறிஸ்தவ மேரி, மருமகள் நந்தினியைச் 'சாங்கியம் செய்வதற்காக' அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ரொசாரியோ, தனது மனைவியின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது அது அணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
புகாரின் அடிப்படையில் மாமியார் கிறிஸ்தவ மேரியை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அளித்த தகவல்கள் திடுக்கிடச் செய்தன. சோழம்பட்டுப் பகுதியில் அழகாபுரம் செல்லும் சாலையில் உள்ள மணிமுக்தா ஆற்றின் கரையோரம் வைத்துத் தனது மருமகளைத் தலை துண்டித்துக் கொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் மற்றும் பொறுப்பு டிஎஸ்பி தங்கவேல், காவல் ஆய்வாளர் விவேகானந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் புதைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய தடயவியல் துறை, வருவாய்த் துறையினர் மற்றும் மருத்துவப் பரிசோதனைக் குழு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
What's Your Reaction?

