குரு பெயர்ச்சிக்குப் பின் இடப்பெயர்ச்சி ஆவாரா செந்தில் பாலாஜி.. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு மே 6க்கு தள்ளி வைப்பு

டெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் அடுக்கடுக்காக பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Apr 29, 2024 - 12:10
குரு பெயர்ச்சிக்குப் பின் இடப்பெயர்ச்சி ஆவாரா செந்தில் பாலாஜி.. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு மே 6க்கு தள்ளி வைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. 35 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கடந்த சில  வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கினை கீழமை நீதிமன்றம் விரைவாக  விசாரித்து முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் இன்று ஏப்ரல் 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜிக்கு இந்த நேரத்தில் ஜாமின் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும்.

மேலும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்கினால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ., பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனுவில் உள்ளது. பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

செந்தில் பாலாஜி கடந்த 11 மாதமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு என பல பண்டிகை நாட்களையும் சிறையில் கழித்தார். மக்களவைத் தேர்தலில் ஓட்டு போடக்கூட வரவில்லை செந்தில் பாலாஜி. இன்னும் சில நாட்களில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. செந்தில் பாலாஜி மேஷ ராசிக்காரர். "ஜென்ம குரு வனத்தினிலே" என்று சொன்னது போல அவர் சிறையில் தவித்து வருகிறார்.  இடப்பெயர்ச்சி ஆக உள்ள நிலையில் சிறையில் இருந்து இடப்பெயர்ச்சி ஆவாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow