ஒரே குடும்பம்.. 3 கோவில்.. அண்ணன் தம்பிகள் நடத்திய போட்டி கும்பாபிஷேகம்.. பலே பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அருகே காட்டாத்தி கிராமத்தில் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் போட்டி போட்டுக்கொண்டு தனித்தனியே மூன்று கோயில்கள் கட்டி ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50 .இளங்கோ வயது 48 .மாசிலாமணி வயது 46. இவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து அவர்கள் குடியிருக்கும் பகுதியில் மகா மாரியம்மன் கோயில் கட்டும் பணியை துவங்கினர் .
இந்தக் கோயில் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே இவர்களுக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அதே பகுதியில் விநாயகர் கோயில் மற்றும் மயிலை வேல்முருகன் கோயில் என தனித்தனியே ஆளுக்கு ஒரு கோயிலாக போட்டியாக கட்டத் தொடங்கினர். இதனை அடுத்து சகோதரர்கள் மூவருக்கும் இடையே கோயில் தொடர்பாக மோதல் முற்றத் துவங்கியது. இதை அடுத்து ஊர் பெரியவர்கள் மூன்று பேரையும் சமாதானப்படுத்த ஏற்பாடு செய்தனர்.
என்ன சொல்லியும் அண்ணன் தம்பிகள் சமாதானம் அடையவில்லை. மூன்று கோயில்களின் திருப்பணிகள் முடிவடைந்த பின்னர் எந்த கோயில் கும்பாபிஷேகம் முதலில் நடத்துவது என முடிவெடுப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இளங்கோ என்பவரால் கட்டி முடிக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதன்படி ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதனை அறிந்த மற்ற இரண்டு சகோதரர்களும் அவர் நடத்தும் அதே தேதியில் நாமும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று நினைத்தனர். மயிலை வேல்முருகன் மற்றும் சுந்தர விநாயகர் ஆகிய கோயில்களுக்கும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து அதன்படி இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் போட்டி போட்டுக்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தினர்.
அண்ணன் தம்பிகள் போட்டி கும்பாபிஷேகத்தால் ஏதும் பிரச்சினை ஏற்படும் என்ற நிலை ஏற்படவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எதிர்பார்த்தது போல எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் போட்டி கும்பாபிஷேகம் சுமூகமாக சுபமாகவும் நடைபெற்றதால் ஊர் மக்கள் நிம்மதியடைந்தனர்.
What's Your Reaction?