செந்தில் பாலாஜி வைத்த புதிய கோரிக்கை.. சென்னை கோர்ட் நாளை உத்தரவு.. நல்ல செய்தி கிடைக்குமா?

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி நாளைய தினம் புதன்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Apr 16, 2024 - 12:11
செந்தில் பாலாஜி வைத்த புதிய கோரிக்கை..  சென்னை கோர்ட் நாளை உத்தரவு.. நல்ல செய்தி கிடைக்குமா?

தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு மே மாதம் முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் ஒரு மாத கால ஓய்வுக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்ற கதவுகளைத் தட்டியும் அவருக்கு ஜாமீன் கிடைத்தபாடில்லை.

செந்தில் பாலாஜி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்ற படியேறியுள்ளார் செந்தில் பாலாஜி. கடந்த 1ஆம் தேதி அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனிடையே சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை தரக்கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நேற்று ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பிற்கு வங்கியில் இருந்து பெறப்பட்ட அசல் ஆவணங்கள் வழங்கபட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில், வங்கியில் இருந்து கொடுக்கபட்ட அசல் செலான்களில் சில வேறுபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில், வங்கி ஆவணங்கள் தொடர்பாக மனுதாரர் தரப்பில் கூறக்கூடிய குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக இல்லை என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதி, மறு விசாரணை கோரும் மனுவில் ஏப்ரல் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow