பாகிஸ்தானின் பிரதமர் பஞ்சாயத்து ஓவர்... மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்...
பாகிஸ்தானில் நீண்ட இழுபறிக்கு பிறகு அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இன்று (மார்ச் 4) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி போட்டியிட அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இந்த தேர்தல் வெற்றி பெற்று ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 133 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேட்சையாக போட்டியிட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் 93 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி.எம்.எல்.-என் கட்சிக்கு 75 இடங்களும், பி.பி.பி. கட்சிக்கு 54 இடங்களும், எம்.க்யூ.எம்.-பி கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்தது.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ’பிபிபி’ மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ’பிஎம்எல்-என் கட்சி’ புதிய அரசை அமைக்கவுள்ளது. இரு கட்சிகளின் பொது வேட்பாளராக நவாஸின் சகோதரா் ஷாபாஸ் அறிவிக்கப்பட்டாா். அவரை எதிா்த்து பிடிஐ கட்சி சாா்பில் உமா் அயூப் கான் போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மாா்ச் 3) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உமா் அயூப் கானுக்கு 92 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து, ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்றதாக சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக் அறிவித்தார்.
இதனையடுத்து, 72 வயதான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாவது முறையாக இன்று (மார்ச் 4) பதவியேற்றுக் கொண்டார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா தற்போதைய அதிபர் ஆரிப் அல்வி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
What's Your Reaction?