இது என்ன நடுநாட்டான் கதை..? சர்ச்சையில் ஆர்.கே சுரேஷின் காடுவெட்டி ட்ரெய்லர்

ஆர்கே சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள காடுவெட்டி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன் ஜி பாணியில் மீண்டும் சாதிய வன்மத்துடன் கூடிய படமாக காடுவெட்டி உருவாகியுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mar 4, 2024 - 16:13
இது என்ன நடுநாட்டான் கதை..? சர்ச்சையில் ஆர்.கே சுரேஷின் காடுவெட்டி ட்ரெய்லர்

தமிழில் மீண்டும் ஒரு நாடக காதல் கதை ரெடியாகிவிட்டதை உறுதி செய்துள்ளது காடுவெட்டி படத்தின் ட்ரெய்லர். மறைந்த காடுவெட்டி குருவின் பயோபிக் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர்கே சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அதாவது ஆர்கே சுரேஷ் தான் காடுவெட்டி கேரக்டரில் நடித்துள்ளார். சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

காடுவெட்டி ட்ரெய்லரின் ஆரம்பமே திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை நியாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆம்! “அதே டெய்லர்… அதே வாடகை..” போல மோகன் ஜி-யின் அதே நாடக காதலை கையில் எடுத்துள்ளார் ஆர்கே சுரேஷ். அதுமட்டுமா அடுக்கு மொழியே ஆட்டம் காணும் வகையில் வசனங்கள் பேசி புல்லரிக்க வைக்கிறார்.

‘நடு நாட்டுல ஒரு சிங்கம் இருக்கு’ என்ற வாய்ஸ் ஓவர் பின்னணியில் குதிரை போல பாய்ந்து வரும் ஆர்கே சுரேஷ், காஞ்சிபுரத்தில் இருந்து காவேரி கரை வரை கோட்டை கட்டி ஆட்சி செய்வதாக ஹைப் கொடுத்துள்ளார் இயக்குநர். சீன் பை சீன் அப்படியொரு பில்டப் கொடுக்க, Prompter-இல் வானிலை செய்தி வாசிப்பதை போல, கரகரத்த குரலில் பஞ்ச் டயலாக் பேசவும் மறக்கவில்லை. 

“போர்ல சாகுறதும் நம்ம சந்ததிக்காக போராடி சாகுறதும் நம்ம குலத்தோட தர்மம் யா..”, “ஒரு பொண்ண தொட்டா அவ திருப்பி வெட்டுவாங்குற பயம் தான் பெண்களுக்கான பாதுகாப்பு..”, ”மரணத்துக்கு பயப்படாம.. பயப்படுறதே மரணம்ன்னு நினைக்குறவங்க நாங்க..” என ஆர்கே சுரேஷ் அடிக்கும் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கும் நெஞ்சை பதற வைக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

காடுவெட்டி படத்தில் தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவரை அடையாளப்படுத்தும் வகையில் வரும் கேரக்டரும் ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. முன்னதாக காடுவெட்டி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது ஆர்கே சுரேஷ் பேசியதும் வைரலானது குறிப்பிடத்தக்கது. நாடக காதலை அம்பலப்படுத்தும் பிம்பங்களுடன் வெளியான திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னவென்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்ற நிலை காடுவெட்டி படத்துக்கும் வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தன் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow