ஈரோடு ஈமு கோழி மோசடி நினைவிருக்கா.. ரூ.4.49 கோடிக்கு சொத்துக்கள் ஏலம்.. முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்குமா?

ஈரோட்டில் 2வது நாளாக நடைபெற்ற பிரபல தனியார் ஈமு கோழி நிறுவனத்திற்கு சொந்தமான 4.32 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் பொது ஏலத்தின் மூலம் 4.49 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

May 9, 2024 - 15:48
ஈரோடு ஈமு கோழி மோசடி நினைவிருக்கா.. ரூ.4.49 கோடிக்கு சொத்துக்கள் ஏலம்.. முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்குமா?

புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுசி ஈமு பார்மஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குருசாமி என்பவரை கைது செய்தனர். மேலும், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில், நிறுவனத்திற்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.

 

இதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், நேற்று (மே 8) நடைபெற்ற ஏலத்தின் போது, ஆரம்ப தொகை அதிகம் என்று கூறி யாரும் ஏலம் எடுக்காததால், ஏலம் ரத்து செய்யப்பட்டது. 2வது நாளான இன்று (மே 9) மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

 

இந்த ஏலத்தில், 30க்கும் மேற்பட்டோர் 25 ஆயிரம் ரூபாய் டிமாண்ட் டிராப்ட் (DD) செலுத்தி கலந்து கொண்டனர். ஏலத்தில் 4 கோடியே 32 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள் ஏலம் விடப்பட்டன. ஏலத்தொகை படிப்படியாக உயர்ந்து, இறுதியாக 4 கோடியே 49 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

 

இதனிடையே 2.97 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மட்டும் ஏலம் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், ஏலம் எடுத்துள்ள நபர்கள் ஏலத்தொகையில் 25 சதவீதம் வரும் திங்கட்கிழமைக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீதமுள்ள தொகையினை 30 நாட்களுக்குள் செலுத்தினால் ஒரு வாரத்திற்குள் கிரையம் செய்து தரப்படும் என கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow