சிலம்பம் சுற்றி, பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் உற்சாகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை "திராவிட பொங்கல் விழா" மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மொத்தம் 8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழர் திருநாளாக இருக்கும்பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடுகிற இந்த சிறப்பான நேரத்தில் உங்களை எல்லாம் சந்தித்து, நம்ம கொள்ளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய கட்சியினருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு முன் கூட்டியே கிடைத்து இருக்கிறது. நமது தொகுதி என்றால் சிறப்பு இருக்கும், மகிழ்ச்சி இருக்கும், ஆரவாரம் இருக்கும்.
கொளத்தூர் நிகழ்ச்சிக்கு நான் வரும்போது சொல்வது உண்டு. என்ன தான் நான் முதல்வராக, பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அந்த நிகழ்ச்சியில் அடையும் மகிழ்ச்சியை விட கொளத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒரு எனர்ஜி எனக்கு வந்துவிடுகிறது.
அந்த எனர்ஜி உடன் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன்.50 சதவீதம் பொங்கல் விழாவை இன்று நாம் சிறப்பாக கொண்டாடி கொண்டு இருக்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆற்றிய சாதனைகளை எல்லாம் உங்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மக்கள் இடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். ஏற்கனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீதம் முடித்துவிட்டீர்கள், இன்னும் 50 சதவீதம் தான் பாக்கி இருக்கிறது.
இன்னைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், பாஜவில் இருக்க கூடியவர்கள் கூட, என்ன சொல்கிறீர்கள் என்றால் திமுகவினர் போல் யாரும் வேலை செய்ய முடியாது என்கின்றனர்.மாபெரும் வெற்றி கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த தொகுதிகளிலும் இருக்கும் திமுகவினர் ஆற்றுகிற பணிகள் எல்லாம் பார்க்கும் போது, ஏற்கனவே நான் 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருந்தேன். நமது கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
இப்பொழுது நாம் செய்து இருக்கும் பணிகளை எல்லாம் பார்க்கும் போது, 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவதற்கு உறுதி எடுப்போம், சபதம் எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

