தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அதி நவீன லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

Dec 30, 2023 - 15:18
Dec 30, 2023 - 18:30
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அதி நவீன லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரிதாக ஏற்படும் கணைய புற்றுநோய் பாதித்த  55 வயது பெண்ணிற்கு முதல் முறையாக அதி நவீன லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக செய்யப்பட்டு, காப்பாற்றப்பட்டதாக  மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பாலாஜிநாதன், ”இரைப்பை, குடல், ஈரல், கணையம் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு குடல் அறுவை சிகிச்சை பகுதியில் மிகவும் சிக்கலான உயரிய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை குடல் அறுவை சிகிச்சை துறையால் செய்யப்பட்டு வருகிறது. 

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், உணவு பழக்கங்களில் மாற்றம் மற்றும் சில வகையான பரம்பரை வியாதி போன்றவற்றால் வரும் கணைய புற்று நோய்க்கான ஆபத்து ஆண்களுக்கு 1 லட்சத்திற்கு 14 ஆகவும், பெண்களுக்கு 1 லட்சத்திற்கு 10 ஆகவும் உள்ளது.

இந்த வகையான கணைய புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை தான் முதன்மையான தீர்வை அளிக்கும்.ஆனால் இந்த அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான, சவாலான காரியம். மஞ்சள் காமாலையோடு வரும் இந்த நோயாளிகள் அறுவை சிகிச்சையில் எதிர்கொள்ள வேண்டிய அதிக ரத்த இழப்பு, ரத்த நாளங்களில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய காயம், அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படக்கூடிய மற்ற உடல் ரீதியான சிக்கல்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு அதற்கு தீவிர சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்ற வேண்டும்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 77 கணைய புற்றுநோய் நோயாளிகளுக்கு இந்த வகையான அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளோம். இப்போது முதல் முறையாக மிகவும் உயரிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சையான லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் மன்னார்குடியை சேர்ந்த கணைய புற்றுநோய் பாதித்த 55 வயது பெண் நோயாளிக்கு முற்றிலும் லேப்ராஸ்கோபிக் முறையில் சிகிச்சை அளித்து தற்போது நல்ல முறையில் உடல்நலம் தேறி வருகிறார்.

மேலும் இந்த வகையான அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். தற்போது இந்த அறுவை சிகிச்சை எந்த வகையான கட்டணமும் இல்லாமல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான  உபகரணத்துடன் கூடிய அறுவை அரங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளதால் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow