வாரத்தின் முதல் நாள் பங்கு சந்தை கடும் சரிவு : ரூ 7 லட்சம் கோடி இழப்பு
வாரத்தின் முதல் நாளான இன்று கடும் சரிவுடன் முடிந்துள்ளது. ரூ. 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,624.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 609.68 (0.71%) புள்ளிகள் குறைந்து 85,102.69 புள்ளிகளில் நிலை பெற்றது. காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் சரிவைச் சந்திக்க தொடங்கியது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. வர்த்தக நேர இறுதியில் நிஃப்டி 225.90(0.86%) புள்ளிகள் குறைந்து 25,960.55 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பங்குகளில் பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எட்டர்னல், டிரென்ட், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸில் டெக் மஹிந்திரா மட்டும் 1.3% வரை லாபத்தைப் பெற்றுள்ளது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.83 சதவீதமும் ஸ்மால் கேப் குறியீடு 2.6 சதவீதமும் சரிந்தன. நிஃப்டி 50 பங்குகளில் 46 பங்குகள் சரிந்து முடிந்துள்ளன. காலையில் ஐடி, மெட்டல் குறியீடுகள் உயர்ந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் அனைத்துத் துறைக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. அதிகபட்சமாக நிஃப்டி ரியல் எஸ்டேட் 3.5% வரை சரிந்தன. பொதுத்துறை வங்கி மற்றும் மீடியா 2% வரையிலும் குறைந்தபட்சமாக ஐடி பங்குகள் 0.29 சதவீதமும் சரிந்து நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக சரிவால் சுமார் ரூ. 7 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்றது இன்றைய சந்தை சரிவுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
What's Your Reaction?

