"போராட்டமா நடத்துறீங்க?" Cabin crew உறுப்பினர்களை பணிநீக்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. இன்றும் விமானங்கள் ரத்து !

300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால் 76 விமான சேவை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேபின் க்ரூ உறுப்பினர்கள் 25 பேரை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

May 9, 2024 - 09:52
"போராட்டமா நடத்துறீங்க?" Cabin crew உறுப்பினர்களை பணிநீக்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. இன்றும் விமானங்கள் ரத்து !

கடந்த 2022ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கியது. தொடர்ந்து ஏர் இந்தியா - விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - ஏ.ஐ.எக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் டாடா குழுமம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஊதியம் வழங்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவதாக நடத்தப்படுவது இல்லை எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்ததால் தமிழ்நாடு உள்ளிட்டு 76 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆத்திரத்தில் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலானது. 

தொடர்ந்து இன்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டம் காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா, திருவனந்தபுரம், சிங்கப்பூர் உள்பட 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கேபின் க்ரூ உறுப்பினர்கள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த மாதத்தில் இதேபோன்று விஸ்தாரா விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow