பெண்ணின் வயிற்றில் மருத்துவ பொருளை வைத்து நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை
நவீன மருத்துவ தொழில்நுட்ப மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டது
தனது தாயாருக்கு கர்ப்பபை அகற்றி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மருத்துவ உபகரணப் பொருளை வயிற்றில் வைத்து தைத்து தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தஞ்சை மாவட்டம், ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகார் மனுவில், எனது தாயார் பெயர் வசந்தா, கடந்த 17. 07 2018ஆம் ஆண்டு வயிற்று வலி மற்றும் கர்ப்பப்பை வலி சம்பந்தமாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினமே மருத்துவர் சசிராஜ் என்பவர் தனது தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.தொடர் சிகிச்சைக்குப் பின்னர் 20-7- 2018 அன்று தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.அதன் பிறகு எனது தாயாருக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனைகள் இருந்து வந்தது இதன் காரணமாக மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் எனது தாயார் வசந்தாவிற்கு கடந்த 16- 12- 2003 அன்று அதிக வலி ஏற்பட்டது.இதன் காரணமாக மீண்டும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் சசிராஜ் தனது தாயார் வயிற்றில் ஏதோ வட்டமான பொருள் இருப்பதாக சொன்னார். எங்களிடம் அறுவை சிகிச்சைக்கான எந்த அனுமதியும் பெறாமல் எனது தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது வயிற்றில் 3 சென்டிமீட்டர் அளவுள்ள வட்டமான அமைப்புடைய அலுமினிய பொருள் இருந்தது.அதனை அகற்றி விட்டோம் என மருத்துவர் சசி ராஜ் எங்களிடம் சொன்னார்.
பின்னர் அந்த பொருளை எங்களிடம் ஒப்படைத்தார்.தனது தாயாருக்கு கர்ப்பப்பை அகற்றி அறுவை சிகிச்சை செய்தபோது தவறாக இந்த அலுமினிய பொருளை வைத்து தைத்து விட்டார். தவறான சிகிச்சை காரணமாகவே எனது தாயார் பாதிக்கப்பட்டார்.எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் சசிராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக மருத்துவர் சசிராஜை நேரடியாக நாம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது அந்த பெண்ணிற்கு வயிற்றை கிழித்து ஓபன் சர்ஜரி செய்யவில்லை.நவீன மருத்துவ தொழில்நுட்ப மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.அலுமினியம் வளையம் போன்ற பொருளை பிறப்புறுப்பில் இருந்து அகற்றப்பட்டது.
எப்படி வந்தது என்பதை நோயாளியான அந்த பெண் வாய் திறந்தால் தான் தெரியவரும் என தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சசிராஜ்.இந்த விஷயத்தை சட்டப்பூர்வமாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என டாக்டர் சசிராஜ் தெரிவித்தார்.பெண் புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் கேட்டபோது, இந்த புகார் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மருத்துவ கவுன்சில் தான் விசாரணை நடத்த முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?