சட்டப்பேரவையில் இன்று (பிப்.22) நடந்தது என்ன?.. அனல் பறந்த விவாதங்கள்..
மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைப்பது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
'தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்' அமைக்கப்படும் என நேற்று (21.02.2024) சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(22.02.2024) 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் (திருத்த) சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேறியது. இந்த சட்ட முன்வடிவு பேரவையில் முன்வைக்கப்பட்டபோது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கும் நோக்கில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மாநில நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு, கட்டுமானம் குறித்து மேற்பார்வை இடவே மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆணையத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைந்த பின் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கலாமா? அல்லது 50 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கலாமா? என மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
பறவை காய்ச்சல் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில்:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆந்திரா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவும் நிலையில் உள்ளதாக அறிந்தவுடன், கால்நடை பராமரிப்பு துறைக்கு உடனடியாக உத்தரவிட்டு, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார். வெளிமாநிலங்களில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
சென்னை, சட்டப்பேரவை, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபு, நெடுஞ்சாலை, மாநில அரசு நெடுஞ்சாலை ஆணையம், பறவைக்காய்ச்சல், எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, மருதமலை முருகன் கோயில், நான்குவழிச்சாலை, எம்.எல்.ஏ அம்மன் கி.அர்ஜூனன்
What's Your Reaction?