தந்தை பால் வீச.. மகன் சிக்ஸர் அடிக்க.. வைரலாகும் கிரிக்கெட் வீடியோ
முகமது நபி வீசிய பந்தினை அவரது மகன் ஹசன் ஐசாகில் சிக்ஸர் அடித்த வீடியோவினை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகமாக விளங்கும் நபர்களில் ஒருவரான ஆல்ரவுண்டர் முகமது நபியும்- அவரது மகனும் கிரிக்கெட் களத்தில் எதிரெதிரே மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அல்லது கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் போட்டிகளில் இதுப்போல் தந்தை-மகன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது அரிதிலும் அரிது. அதுவும் ஒருவருக்கொருவர் எதிர்த்து விளையாடுவது என்பது கண் கொள்ளாக் காட்சி எனலாம்.
ஷ்பகீசா கிரிக்கெட் லீக்கில் அமோ ஷார்க்ஸ் அணிக்காக, முகமது நபியின் 18 வயது மகனான ஹசன் ஐசாகில் விளையாடுகிறார். 40 வயதாகும் முகமது நபி மிஸ் ஐனக் நைட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.அமோ ஷார்க்ஸ் மற்றும் மிஸ் ஜனக் நைட்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று நடைப்பெற்றது. இப்போட்டியில் 9-வது ஓவரினை வீச முகமது நபி வந்தார். பேட்டிங் செய்துக்கொண்டிருந்தது அவரது மகன்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது ஓவரின் முதல் பந்தினை முகமது நபி வீச, லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடித்து தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஹசன் ஐசாக். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹசன் ஐசாக் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இவரின் அரைச்சதத்தினால், அமோ ஷார்க்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மிஸ் ஜனக் நைட்ஸ் அணி 17 ஓவர்களில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முகமது நபியின் மகன் ஹசன் ஐசாகில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகிறார். இதுவரை 25-க்கும் மேற்பட்ட உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஐசாகில் 600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் 4 அரைச்சதங்களும் அடங்கும். ஆப்கானிஸ்தான் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் ஹசன் ஜசாகில் விளையாடி வருகிறார்.
’தனது மகனுடன் இணைந்து தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு. அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்’ எனவும் முகமது நபி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






