சென்னையில் தலை தூக்கும் தண்ணீர் பற்றாக்குறை.. கோடையை எப்படி சமாளிக்கப்போகிறது தமிழக அரசு

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் அரசு குடியிருப்பில் உள்ளவர்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

May 3, 2024 - 07:05
சென்னையில் தலை தூக்கும் தண்ணீர் பற்றாக்குறை.. கோடையை எப்படி சமாளிக்கப்போகிறது தமிழக அரசு

தலைமை செயலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்  குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வீதியில் இறங்கி அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தினசரியும் 3 கேன்கள் வரை காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கு வசிப்பவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். திடீர் சாலை மறியல் காரணமாக நேற்றிரவு திருமங்கலம், அண்ணாநகர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையின் புறநகர் பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேசன் குடிநீர் வழங்கப்படாத பகுதிகளிலும் கோடை காலமாக இருப்பதால் நிலத்தடி நீரும் சரிவர கிடைக்காமலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கரணை பகுதியில் கடந்த 1 மாதத்திற்கு முன்பாகவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோடை காலம்  என்பதால் மின்சார தேவையும் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவு 107 கோடி லிட்டர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் மே 1 வரை வழக்கமான அளவை விட 80 சதவீதம் குறைவான அளவே மழை பெய்துள்ளது. 

இந்த காலகட்டத்தில் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கோடை மழையும் பொய்த்து விட்டது. பல மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. தற்போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்நினோ நிலவுவதால் தமிழக பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும்.போதிய மேகங்கள் உருவாகாததால் மழை வாய்ப்பு குறைந்துள்ளது  என  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச் சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது பூண்டி ஏரியில் 1,020 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2,930 மில்லியன் கன அடி, கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகையில் 386 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2,389 மில்லியன் கன அடிஎன மொத்தம் 6,855 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.வீராணம் ஏரி வறண்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 8,263 மில்லியன் கனஅடியாக இருந்தது. இந்த ஆண்டு நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 1,408 மில்லியன் கனஅடி நீர் குறைவாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ? என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு செப்டம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும்.மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மீஞ்சூர், நெம்மேலியில் தினமும் 210 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு நெம்மேலியில் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 150 மி. லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. எனவே இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வருணபகவான் மனது வைத்து மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும் என்பது சென்னைவாசிகளின் நம்பிக்கையாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow