10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலை.. ரூ.4000 கோடி ஒதுக்கீடு..சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Jun 24, 2024 - 13:14
10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலை.. ரூ.4000 கோடி ஒதுக்கீடு..சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் 4வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக அதிமுகவினர் இன்று ஆர்பாட்டம் நடத்துவதால் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை. 

கேள்வி நேரம் முடிந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இன்றி அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதையே திராவிட மாடல் அரசின் இலக்காகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.


சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது என்றும், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. “தமிழகத்தில் சுமார் 1.38 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு – ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி,பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16,596 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வரும் இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow