மே 1-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த முடியாதா?.. காரணம் என்ன தெரியுமா?

Apr 26, 2024 - 16:11
மே 1-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த முடியாதா?..  காரணம் என்ன தெரியுமா?

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மே 1ஆம் தேதி தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை ஜனவரி 26-ஆம் தேதி  குடியரசு தினம், மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 1-ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினம் மற்றும் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்திலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  அதன்படி, ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் கிராமங்களி்ன் வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். 

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வழக்கமான கூட்டங்களை நடத்த எந்த தடையும் இல்லை எனவும் கடந்த ஜனவரியில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

ஆனால், கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டிய நாட்களுக்கு ஒருவாரம் முன்னதாக வருவாய்த் துறைக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow