நாளை 2-ம் கட்டத்தேர்தல்.. பீகாரில் பாஜகவிற்கு எதிர்ப்பு? வயநாட்டில் கொடிநாட்டுவாரா ராகுல்?..

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய தென்மாநிலங்கள் உள்ளிட்ட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Apr 25, 2024 - 12:47
நாளை 2-ம் கட்டத்தேர்தல்.. பீகாரில் பாஜகவிற்கு எதிர்ப்பு? வயநாட்டில் கொடிநாட்டுவாரா ராகுல்?..

அசாம், பீகாரில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்குவங்கத்தில் தலா 3 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், கேரளாவில் மீதமுள்ள 20 தொகுதிகள், மத்தியப்பிரதேசத்தில் 7 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா, ஜம்முகாஷ்மீரில் தலா 1 தொகுதி என, மொத்தம் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

வெற்றிக்கனியைப் பறிப்பாரா ராகுல்..

கேரளாவைப் பொறுத்தவரை, வயநாட்டில் 2ம் முறையாக போட்டியிடும் ராகுல்காந்தி கவனம் பெறுகிறார். I.N.D.I.A கூட்டணியில் உள்ள CPI- கட்சியைச் சேர்ந்த ஆனி ராஜா என்ற பெண் வேட்பாளருடன் ராகுல் மோதுகிறார். கடந்தமுறை நான்கரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ராகுல், இம்முறை அதைவிட குறைவான வாக்குகளையே பெறமுடியும் என்று கூறப்படுகிறது. அத்தொகுதியில், 10 சதவீதத்திற்கும் மேலாக மலைவாழ் சாதியினரின் வாக்குகள் உள்ள நிலையில், அவை ராகுலுக்கு எதிராகவே உள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் மிரட்டல் ஒருபுறம் இருக்க, கூட்டணி குழப்பம் எனக்கூறி பாஜகவும் இந்த மோதலை வைத்து காய் நகர்த்தி வருவதால், ராகுலின் வெற்றி எட்டாக்கனியா, எட்டும் கனியா என்பது கேள்விக்குறியே.. இதுதவிர, திருச்சூரில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ்கோபி களமிறக்கப்பட்டுள்ளார்.

தென்மாநில நிலவரங்கள் என்ன?

கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதி நடக்கவுள்ள 14 தொகுதிகளை பொறுத்தவரை, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ள 7 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நடைபெறும் நிலையில், ராஜஸ்தானில் நடைபெறவுள்ள 13 தொகுதிக்கான தேர்தலில், ஓம்பிர்லா, 2 மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவரை பாஜக களமிறக்கியுள்ளது. இங்கு காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மகன் வைபவ், பாஜக முன்னாள் முதலமைச்சர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

மகாராஷ்டிராவில், சரத்பவார் - உத்தவ்தாக்கரே அணி சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலையில், நான்டெட் - அமராவதி தொகுதிகள் கவனம் பெறுகின்றன. காங்கிரஸ் கோட்டையான நான்டெட் தொகுதியில், அசோக் சவானின் ஊழலை பிரதமரே ஒரு காலத்தில் விமர்சித்த நிலையில், தற்போது பிரதமரின் ஆதரவுடன் பாஜகவில் கரைந்து அதே தொகுதியில் அசோக் சவான் களம் காண்கிறார். 

வடமாநிலங்களில் ஆதரவு யாருக்கு..?

பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதிஷ்குமாரின் திடீர் மாற்றம், மாநிலத்தில் அரசியல் அலையையே திருப்பி விட்டுள்ளது. இதுதவிர, பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டுள்ளது, NDA கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் ஒரே தொகுதியில் தேர்தல் நடைபெறும் போதும், முதல் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு மையத்திலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் கலவரம் ஏற்பட்டதன் எதிரொலி ஆகியன, பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக அலை வீசுவதாக கூறப்படுகிறது..

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர், தேஜஸ்வி சூர்யா, டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், ஹேமமாலினி, கேரளா முன்னாள் முதலமைச்சர் மகன் அனில் அந்தோணி, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் களத்தில் உள்ளனர். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முடிவில், வெற்றிக்கனியை பறிப்பது பாஜகவா - காங்கிரசா என்பது ஜூன் 4ம் தேதியே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow