டி20 உலகக்கோப்பை: 'சூப்பர் 8' சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்... அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா மோதல்!
அமெரிக்கா அணியை பார்த்தால் வலுவான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்தியாவுக்கு எதிராகவும் கடைசிவரை போராடிதான் தோல்வி அடைந்தது.
ஆன்டிகுவா: டி20 உலகக்கோப்பையில் 'சூப்பர் 8' சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா-தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸுல் நடந்து வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. மொத்தம் 8 அணிகள் அடுத்த சுற்றான 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2ல் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன.
இந்த 8 அணிகளில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய நேரடி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அமெரிக்கா-தென்னாபிரிக்கா அணிகள் மோத உள்ளன.
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை நேபாளம், வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி 'சூப்பர் 8' சுற்றுக்கு வந்துள்ளது. இதில் நேபாளம், வங்கதேசம் ஆகிய அணிகளை கடைசிவரை போராடிதான் வென்றது.
தென்னாப்பிரிக்காவில் குயின்டன் டி காக், ரீசா ஹென்றிக்ஸ், ஸ்டப்ஸ், கேப்டன் மார்க்கரம் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி விளையாடவில்லை. நடுவரிசையில் டேவிட் மில்லர், ஹென்ரிக் கிளாசன் தூண்போல் நின்று காப்பற்றுகின்றனர்.
அதே வேளையில் பவுலிங்கில் ரபடா, நோர்க்யா, மகாராஜ், கோட்ஸி சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். பேட்டிங்கிலும் பார்முக்கு திரும்பினால் தென்னாப்பிரிக்கா அணி வலுவாக மாறும்.
மறுபக்கம் அமெரிக்கா அணியை பார்த்தால் வலுவான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்தியாவுக்கு எதிராகவும் கடைசிவரை போராடிதான் தோல்வி அடைந்தது. கேப்டன் மோனங்க் படேல், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ்குமார், ஆண்ட்ரிஸ் கௌஸ் சூப்பராக பேட்டிங் செய்து வருகின்றனர்.
பவுலிங்கில் சௌரப் நேத்ரவல்கர், ஹர்மீத் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே வலிமையுடன் திகழ்கின்றனர். அத்துடன் பீல்டிங்கிலும் கலக்குவதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
லீக் சுற்று ஆட்டங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் நடந்தது. அங்குள்ள மைதானம் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் அதிகப்பட்ச ஸ்கோரே 130 ரன்கள்தான். ஆனால் சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டிஸ் மைதானங்களில் நடைபெற உள்ளது.
இந்த மைதானங்கள் பவுலர்கள், பேட்டர்கள் என 2 பேருக்குமே சாதகமாக விளங்கும். இதனால் மறுபடியும் டி20 கிரிக்கெட்டில் 180 ரன்களுக்கு மேல் அடிக்க முடிவதை பார்க்க முடியும்.
What's Your Reaction?