சட்டென்று மாறிய வானிலை... சென்னையில் கொட்டித் தீர்த்த மழை... விமான சேவை பாதிப்பு!

பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

Jun 19, 2024 - 08:42
சட்டென்று மாறிய வானிலை... சென்னையில் கொட்டித் தீர்த்த மழை... விமான சேவை பாதிப்பு!
விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ன. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடுமையான வெயில் வாட்டியது. சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை பதிவானது.

அதன்பிறகு கடந்த மாத இறுதியில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

இதன்பின்பு அக்னி வெயில் மீண்டும் கோர முகத்தை காட்டத் தொடங்கியது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவாக மழை பெய்தது. நேற்று காலையில் வெயில் கடுமையாக அடித்தது. ஆனால் நேற்று இரவில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர், வடபழனி, ராயப்பேட்டை, சாந்தோம் உள்பட பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. வெளி இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சேலத்தில் எடப்பாடி, கள்ளுக்கடை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அதிக வெப்பநிலை பதிவாகி வந்த வேலூரில் அலமேலுமங்காப்புரம், சத்துவாச்சாரி, வள்ளலார் ஆகிய இடங்களில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவையில் சில பகுதிகளிலும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow