18வது லோக்சபா முதல் நாளிலேயே பரபரப்பு.. 39 தமிழக எம்.பிக்களும் இன்று பதவியேற்பு!.. என்ன முழக்கம் எழுமோ?

டெல்லி: லோக்சபாவில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது என்ன முழக்கங்களை எழுப்ப உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Jun 25, 2024 - 07:33
18வது லோக்சபா முதல் நாளிலேயே பரபரப்பு.. 39 தமிழக எம்.பிக்களும் இன்று பதவியேற்பு!.. என்ன முழக்கம் எழுமோ?

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  கூட்டத்தின் முதல் நாளிலேயே பரபரப்பான பல சம்பவங்கள் நடந்தன. இடைக்கால சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே மோதல் நிலவி வருகிறது. 

8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் தலித் தலைவர் கே.சுரேஷை  தற்காலிக சபாநாயகராக நியமிக்காமல், பாஜகவை சேர்ந்த 7 முறை எம்பியான பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே காந்தி சிலை இருந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தியும் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். 

தற்காலிக சபாநாயகர் நியமன விவகாரத்தில் பாஜ அரசியலமைப்பை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி, அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ‘அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்’ என அவர்கள் முழக்கமிட்டனர். அதன்பின்னர் அவர்கள் அரசியலமைப்பு புத்தகத்துடனே அவைக்குள் சென்றனர்.

இதனையடுத்து முற்பகல் 11 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு லோக்சபா கூட்டம் தொடங்கியது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவியேற்றார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்தி காண்பித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து தற்காலிக துணை சபாநாயகர்களாக கொடிக்குன்னில் சுரேஷ், டிஆர்பாலு, சுதிப் பந்தோபாத்யாய் ஆகிய இந்தியா கூட்டணி எம்பிக்களை பதவியேற்க அழைத்தார் தற்காலிக சபாநாயகர். இதனை ஏற்க மறுத்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மறுத்து விட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் லோக்சபா உறுப்பினர்களாக பதவியேற்றனர். 

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்ற போது, நீட் தேர்வு முறைகேடுகளை முன்வைத்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போதும் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. முதல் நாளில் மொத்தம் 280 லோக்சபா உறுப்பினர்கள் நேற்று கடவுளின் பெயராலும் மனசாட்சியின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.  ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தாய்மொழிகளில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

லோக்சபாவில் 2-வது நாளாக இன்று தமிழகம் உட்பட இதர மாநில எம்பிக்கள் பதவியேற்கின்றனர். தமிழகத்தின் 39 எம்பிக்களும் பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க உள்ளனர். கடந்த முறை லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் பதவியேற்ற போது, பெரியார் வாழ்க- தமிழ் வாழ்க என முழங்கினர். இதற்கு ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என பாஜக எம்பிக்கள் பதில் முழக்கமிட்டனர். இந்த முறை தமிழக எம்பிக்களின் முழக்கம் என்னவாக இருக்கும்? அதற்கு பதில் முழக்கம் என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆரம்பமே அமர்களம் என்பது போல முதல் நாளிலேயே லோக்சபாவில் பரபரப்பு ஆரம்பித்து விட்டது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா கூட்டணி எம்பிக்களும் அதிக அளவு வென்று லோக்சபாவிற்கு சென்றிருப்பதால் இந்த முறை கூட்டத்தொடரில் சத்தமும், சலசலப்பு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow