தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் தீபாவளியான அக்டோபர் 31ம் தேதிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையான தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை கிடைத்தால் அதனோடு சேர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் அனைவரும் இருந்தனர்.
இந்நிலையில் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்று தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியைப் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவிருக்கின்றனர். ஒருநாள் விடுமுறை போதாது என்கிற நிலையில் தமிழக அரசு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நவம்பர் 1ம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்ய நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமையை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது. ரயில் முன்பதிவு நிறைய மக்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
What's Your Reaction?