ராட்வைலர்ஸ் முதல் பிட்புல் டெரியர் வரை.. 23 வகையான நாய் இனங்களுக்கு தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாய்கள் கடித்து பொதுமக்கள் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களை இறக்குமதி செய்யவும், வளர்ப்பு பிராணியாக விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

May 9, 2024 - 21:26
ராட்வைலர்ஸ் முதல் பிட்புல் டெரியர் வரை.. 23 வகையான நாய் இனங்களுக்கு தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

கடந்த 6-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியின் 5 வயது மகளை ராட்வைலர் இன வகையை சேர்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு தாக்கி கடித்து குதறியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்த சுரேஷ், நீலா என்ற தம்பதி நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அதே பகுதியை சேர்ந்தவரின் வளர்ப்பு நாய் ஒன்று இருவரையும் கடித்துள்ளது. இச்சம்பவம் குறித்து நீலா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வளர்ப்பு நாள் மற்றும் தெருநாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. 

இந்த நிலையில் 23 வகை நாய் இனங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  கடந்த மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தமிழக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த 23 வகை நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணியாக இந்த 23 வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முககவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும்.

அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்துக்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை, தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow