அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி... 20 கோடியை சுருட்டிய இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் கைது...
ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மூலப்பாளையம் அடுத்த விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மார்டின். இவர், கடந்த 2019ஆம் ஆண்டில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, இவருக்கும் அதே நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜரான கோவையை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பார்த்திபன் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஈரோட்டில் உள்ள ராஜேஷ் மார்டின் வீட்டிற்கு வந்த பார்த்திபன், தனது நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக அரசின் தலைமை செயலகத்தில், உள்ளாட்சித் துறை பிரிவில் பணியாற்றி வருவதாகவும், அவர் மூலம் ஏற்கனவே பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாகவும், அதற்கான சில ஆவணங்களையும் ராஜேஷ் மார்டினிடம் காண்பித்துள்ளார்.
தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தமிழ்நாடு கிராம வங்கி உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் அரசு பணி வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். இதனால், படித்து விட்டு வேலை தேடும் நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் படிப்பிற்கு தகுந்தார் போல் பணம் கொடுத்தால் நிச்சயம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் பார்த்திபன்.
இதனை உண்மை என நம்பிய ராஜேஷ் மார்டின் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை பார்த்திபனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில், ஈரோடு மாநகராட்சியில் மண்டல அலுவலகத்தில் நில அளவையர் பணி வாங்கி தருவதாகவும், கோவை சிங்காநல்லூர் மாநகராட்சி அலுவலகத்தில் நில அளவையர் பணியும், ஈரோட்டிலுள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் உதவி மேலாளர் பணி வாங்கி தருவதாகவும் பார்த்திபன் உறுதி அளித்துள்ளார்.
இதற்காக பார்த்திபன் கூறிய வங்கி கணக்கிற்கு 20 லட்சத்து 9ஆயிரத்து 999 ரூபாய் பணத்தை பல்வேறு தவணைகளாக ராஜேஷ் மார்ட்டீன் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பார்த்திபன் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. மேலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் மார்ட்டின் கடந்த மே 6ம் தேதி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் சங்கீதா, விசாரணை மேற்கொண்ட நிலையில், பார்த்திபன் இதுபோல பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவர் வேறொரு வழக்கில் கோவையில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பார்த்திபன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பார்த்திபனிடம் ஈரோட்டில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அவரிடமும், சிறைத்துறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். விரைவில், பார்த்திபனை நீதிமன்ற உத்தரவு பெற்று, காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?