பெங்களூரு அணி வெற்றி... பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப்...
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டூ பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9 ரன்களில் டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வில் ஜாக்ஸ் 12 ரன்களிலும், ரஜத் பட்டிதர் 55 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். மறுபுறம் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி, 47 பந்துகளில் 92 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய கேமரன் கிரீன் 46 ரன்கள் அடித்து விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்து அசத்தியது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் , வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 242 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. சாமர்த்தியமாக பந்துவீசிய பெங்களூரு அணி, தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரனை 6 ரன்களிலும், பேர்ஸ்டோவ் 27 ரன்களிலும் வீழ்த்தியது. அதிரடியாக விளையாடி வந்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சஷாங் சிங் 37 ரன்களிலும் ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும், கேப்டன் சாம் கரண் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
17 ஓவர்கள் மட்டுமே விளையாடிய பஞ்சாப் அணி 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 8வது தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மும்பை அணியை தொடர்ந்து 2-வது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் அடித்த விராட் கோலி, நடப்பு சீசனில் இதுவரை 634 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு ஐபிஎல் சீசனில் 600 ரன்களை கடப்பது இது 4வது முறை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர் என்ற கே.எல். ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
What's Your Reaction?