சந்தேஷ்காலி போராட்டத்தை தலைமை தாங்கி பாஜக வேட்பாளரானவருக்கு எதிராக அவதூறு.. TMC-க்கு வலுக்கும் எதிர்ப்பு
நாட்டையே உலுக்கிய சந்தேஷ்காலி போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பெண், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிட்டு மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை குவித்துள்ளது.
பழங்குடிகள் குவிந்த சந்தேஷ்காலி தீவை தனது கூட்டாளிகளான ஷிபா பிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தாருடன் சேர்ந்து மொத்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான். பழங்குடியினரின் நிலத்தை அடித்துப் பிடுங்குவது, தரவில்லையெனில் நிலத்தில் கடல்நீரை கொண்டு சென்று பாய்ச்சுவது, கட்சி அலுவலகத்தில் பழங்குடிப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது உள்ளிட்ட ஏராளமான கொடுமைகளில் ஷேக் ஷாஜகான் தலைமையில் மூவரும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து ரேகா பத்ரா என்ற பெண் முதன்முதலாக குரல்கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்களை திரட்டி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதன் மூலம் அட்டூழிய செய்திகள் வெளியாகி, மக்கள் போராட்டத்தால் அழுத்தம் அதிகரித்து யாராலும் நெருங்க முடியாத மூவரும் அதிரடியாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு TMC-ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவ்வாறு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ரேகா பத்ரா, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், சந்தேஷ்காலி கிராமம் அடங்கிய பஷீர்ஹட் தொகுதிக்கு பாஜக வேட்ளபாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், சக்தியின் ஸ்வரூபமே நீங்கள்தான் என அவரை போனில் அழைத்து பிரதமர் புகழ்ந்திருந்தார். இந்நிலையில் ஆளும் அரசின் நிவாரணங்களை அனுபவித்துக் கொண்டு தன்னை பாஜக வேட்பாளராக ரேகா பத்ரா கூறிக்கொள்வதாக TMC சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அடுத்த முறை ரேகாவுக்கு பிரதமர் போன் செய்யும்போது, மாநிலத்திட்டத்தின் பலன்கள் குறித்து கேட்டறிந்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. தோல்வியுற்ற ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, மாநில ஸ்வத்ய சதி நடவடிக்கை மூலம் எவ்வாறு பயனுடன் உள்ளது என தெரிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ரேகா பத்ராவின் ஆதார் எண், போன் நம்பர், வங்கிக் கணக்கு தகவல்கள் உள்ளிட்டு அவரது அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் TMC வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் ஒரே பெண் முதலமைச்சரைக் கொண்ட மேற்குவங்கத்தில், பெண் வேட்பாளரின் பெயரை TMC கலங்கப்படுத்தியுள்ளது என தேசிய மகளிர் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் இதனை கண்டித்துள்ளன.
What's Your Reaction?