லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள்... தபால் ஓட்டு ரெடி... நெறிமுறைகள் அறிவிப்பு.!

மக்களவைத் தேர்தலில், ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டு முறையில் தபால் ஓட்டுப்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Apr 2, 2024 - 12:24
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள்... தபால் ஓட்டு ரெடி... நெறிமுறைகள் அறிவிப்பு.!

இதன்படி, தபால் வாக்கு சீட்டு, அறிவிப்பு படிவம், வாக்கு சீட்டுகளை அனுப்புவதற்கான கவர், மற்றும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எலக்ட்ரானிக் முறையில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த ஆவணங்களை, ராணுவ முகாமின் யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு அளிக்கப்பட்டுள்ள ஓடிபி மூலம் பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை சம்பந்தப்பட்ட ராணுவ  வீரரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பதிவேட்டை சம்பந்தப்பட்ட யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் வாக்கு சீட்டில் தனது வாக்கை பதிவு செய்து அதற்கான ஆவணங்களுடன் விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் முறைகேடு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வாக்குச்சீட்டுக்கும்  ‘கியூ-ஆர் கோடு’ ஸ்டிக்கர் இருக்கும் என்றும், வாக்கு  எண்ணிக்கையின் போது அந்த ‘கியூ-ஆர்’ கோடினை ஸ்கேன் செய்த பிறகு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow